Friday, January 2, 2009

நந்தன் அண்ணாவின் நினைவுகளோடு ...


இணையத்தில் பார்த்த செய்தி கொஞ்சம் பழைய நினைவுகளை கிளறி விட்டது , கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் அமரர் நாகலிங்கம் நந்தகுமார் அவர்களின் நினைவஞ்சலி ... கனக்கும் மனசோடு போட்டி போட்டு இதை பதிவாக்குவதில் முனைய வலி மட்டுமே இறுதியில் மிஞ்சி நிற்கிறது ..இதுவே முதல் பதிவு ஆனதில் வருத்தம் தான் எனக்கு ...

ஒற்றை இரவில் அகதியான நாள் , யாழ் இடப்பெயர்வு ... வன்னி மண் எமக்கு புதிது .. அந்த உயிர் குடிக்கும் கொசுவும் , மலேரியா காச்சலும் கொஞ்சம் கொஞ்சமாய் பழக ஆரம்பித்த நாட்கள் ...
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் இருந்த எமக்கு அப்போதைய ஆறுதல் ஸ்கந்தபுர நூலகம் மட்டும் தான் . அதற்கும் ஒரு நாள் கேடு வந்தது கரையான் ரூபத்தில் ...இப்ப நினைக்கவும் சிரிப்பாய் வருகிறது...எனது அக்கா படித்துவிட்டு விரித்தபடி வைத்த புத்தகம் ,காலையில் பார்க்கையில் சில பக்கங்கள் கரையானால் தின்னப்பட்டு இருந்தது. போய்ச் சொல்லி அபராதம் கட்டலாம் என சொல்ல பொறு .. இப்படிச் செய்வம் ,கண்டு பிடித்தால் பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்லி .. அந்தப் பக்கங்களின் சுவடே தெரியாமல் வெட்டி விட்டு நல்ல பிள்ளைகளாய் நூலகம் சென்றோம் இருவரும் ..அங்கு கொடுத்துவிட்டு திரும்பி வந்து சைக்கில் எடுக்கையில் அவர்களுக்கு தெரிந்து பின் என்ன ,,,அசடு வழிந்து ... உங்க ஊர் கரையானால் தான் எனக் குறை கூறியாதும் , அக்காவை திட்டிக் கொண்டே நான் வந்தது ... அன்று தான் நந்தன் அண்ணாவை முதல் முறையாகப் பார்த்த நாள் ...
பின்பு ஒரு நாள் ...
பள்ளி தொடங்காத நிலையில் ஸ்கந்தபுரம் 'கேம்பிரிச்' ரியூசனுக்கு சேர்ந்து புது நட்பு வட்டாரத்தோடு இணைந்து இருந்த நேரம் ... முதல் வரிசையில் கணித ஆசிரியருக்காக காத்திருக்கையில் வந்தவர் சாட்சாத் நந்தன் அண்ணா தான்...அவரும் என்னை இனங்கண்கொண்டு கொள்ள , திரும்ப அதே அசட்டுச் சிரிப்போடு இருந்து விட்டு ,வீடு வந்து அக்காவுடன் சண்டை போட்டதும் ஜாபகத்தில் உள்ளன ...எல்லோரும் மாஸ்ரர் என அழைக்க ,நான் மட்டும் நந்தன் அண்ணா என கூப்பிட ஆரம்பித்தது ஏன் என இப்போது வரைக்கும் தெரியாது ...புதிதாக வந்தவர்கள் உங்க அண்ணாவா எனக் கேட்டும் போதும் ..நான் ஓம் எனச் சொல்லியதும்...

கணித பாடம் வேப்பங்காயாய் இருந்த எனக்கு அதனை நேசிக்க வைத்தவர் ,, இங்கு இந்தியா வந்தபின்பும் "இலங்கை மாணவர்கள் கணிதத்தில் கெட்டிக்காரர் "என்னும் பெயரை என்னாலும் காப்பற்ற முடிந்தது நந்தன் அண்ணாவால் தான்..நன்றிகள் அண்ணா ..அவரை நினைக்கையில் ஈக்குக்குச்சி ஜாபகம் வரும் .. பாடத்தில் வரும் "கிராப்"ல் "ஆர்க்" வரைய நேரும் போதெல்லாம் ,நான் புள்ளிகள் மட்டுமே வைத்துவிட்டு இருப்பேன் ...கோணலாய் வருகுது அண்ணா எனச் சொல்லி ... அடுத்த வகுப்புக்கு வரும் போது பச்சை ஈக்குச்சி கொண்டு வரணும் சரியா ..எனச் சொல்லிக் கொண்டு வரைந்து ,அழகாய் முடிந்துக் கொடுப்பவர் ...அவர் யாழ் போகும் வரை எனக்காக வரைந்தும் அவர் தான், கடைசியாய்க் கேட்டார் ,பரிட்சைக்கு என்ன செய்விங்க என..அப்ப பார்த்துக்கலாம் அண்ணா எனச் சொல்லுவேன் ...

எங்காவது அவரும் ,அம்பிகா அக்காவும் கதைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டால் ,சைக்கிளில் அருகில் சென்று ,நானும் என் தோழிகளும் "அடுத்தது கணிதப் பாடம் என்ன... கிளாசுக்கு லேட்டா போன எங்க மாஸ்ரர் திடுவார்,கெதியா "எனச் சொல்லி ஓடுவோம், வகுப்பறை வந்ததும் என் காது திருகிச் சிரிப்பார்..இன்று அதே அம்பிகாக்கா கைக் குழந்தையுடன் கதறிக் கொண்டு இருப்பதையும் பார்க்கும் கொடுமையை தந்து விட்டு செல்ல வைத்து எது ?
கடைசியாய் யாழ்ப்பாணம் போக கிளம்பிய பின்,எம்மிடம் விடைபெற வந்தது இன்னும் கண்முன்னால்..உங்க 'சேட்' தான் போட்டு இருகிறன் ,என எனக்கு பிடித்தமான வெளிர் பச்சை நிறச் சட்டையுடன்,எமக்கு வாழ்த்து சொன்னதும், என்றாவது நாம சந்திப்போம் தானே ..கவலைப்படாம படியுங்க எனச் சொல்லிச் சென்ற நந்தன் அண்ணா...
நானும் தனுஷாவும் ரியுசன் வரும் வழியில் சைக்கிளில் விழுந்து எழும்பி செம்மண்ணும் ,காயத்தோடு வந்து சேர்ந்ததை அடிக்கடி சொல்லி நக்கலடிக்கும் நந்தன் அண்ணா,இரட்டையர்களான தர்ஷியும் ,தர்ஷனும் வகுப்பில் போடும் சண்டைகளைப் பார்த்து ,"சந்திரிகாவும் ,பிரபாகரனும் சண்டைய கொஞ்சம் நிப்பாட்டுங்கோ "என அடிக்கடி அவர் சொல்லுவதும் இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறது..

இப்படி எத்தனையோ இனிய நினைவுகள் ..
நம்பிக் கொண்டிருந்தேன் என்றோ ஒருநாள் திரும்பி வருவேன் ..உங்கள் எல்லோரையும் சந்திப்பேன் என.. என்னைப்போல எத்தனை பேரின் நம்பிக்கைக்கு எமனாய் வந்தது அல்லவா உங்கள் மரணச் செய்தி..என் தோழியிடம் அலைபேசியில் கதைத்துவிட்டு எப்போதும் போல எல்லோரையும் விசாரித்துக் கொண்டு இருந்தேன் ...
அப்படியே நந்தன் அண்ணா எங்க இருக்கிறார் எனக் கேட்க ,உங்கள் மரணச் செய்தி சொன்னாள் , உனக்கு தெரிந்தால் கவலைப் படுவாய் எனச் சொல்லவில்லை என்று சொன்னாள் நான்கு மாதங்கள் கழித்து ..இடி இறங்கியது போல் இருந்தது.....நம்பாமல் இணையத்தில் தேடி உறுதிப் படுத்திய பின்பும் ...பொய்யாக இருக்கக் கூடாதா என ஏங்கியது மனது ..நீண்ட நாட்களுக்கு பின் கண்ணீர் எட்டிப் பார்த்தது அன்று தான்..உயிர் பிரியும் நேரத்தை விட கொடுமையல்லவா நாம் நேசித்தவர்களின் பிரிவின் வலி ... உங்களை இழந்த வலியின் சுமையோடு நாம் ...

கவிஞர் வைரமுத்தின் வரிகள் நினைவிற்கு வருகின்றன ....
" நான் கண்ணால் பார்த்த யாரும்
எனக்கு முன்னால் பயணப்பட வேண்டாம்"

இனிய சகோதரனே !
எப்போதும் புன்னகையும்
ஆர்ப்பாட்டம் இல்லா அறிவும்
அனைவரையும் நேசிக்கும் பண்பும்
கற்றுக் கொடுக்கும் பாங்கும் ..
அவ்வளவு அழகு ...
யாரோ ஒருத்தியான எனக்கே
இத்தனை வலிகள் என்றால்
உன் உறவுகளை நினைத்து
கரைகின்றன விழிகள் ...
தொலைந்து போன நேசத்தை
நினைவுகளில் தேடுகிறேன் ...

தமிழ்நெற் இணைப்பு 01
தமிழ்நெற் இணைப்பு 02
தமிழ்வின்

4 comments:

  1. நல்லவர்கள் விரைவாக
    எம்மைவிட்டு போய்விடுகிறார்கள்
    என்பதற்கு நந்தன் அவர்களின்
    மரணமும் ஒரு எடுத்துக்காட்டு.


    அவரை இழந்து தவிக்கும்
    குடும்பத்தாருக்கும் மக்களுக்கும்
    எப்படி ஆறுதல் சொல்வது

    ReplyDelete
  2. விழி கசியச் செய்த பதிவொன்று சினேகிதி :(

    ReplyDelete
  3. உண்மை தான் அண்ணா .. நான் மிகவும் நேசித்த ஒரு ஜீவன், உடன் பிறவாத சகோதரனாய் ...போர் எப்படி எல்லாம் எம்மை அழ வைக்கிறது ..நன்றிகள் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

    ReplyDelete
  4. நன்றிகள் ரிஷான் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ..

    ReplyDelete

 
Copyright © 2007-2009 www.snehidhi.tk™. All Rights Reserved.