Tuesday, July 28, 2009

தனிமையின் இசைக் கலைஞன்-பியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை




" மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை."


பியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை

அமைதியான ஒரு தேசம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பு. மொத்தமாய் எல்லாமே மாறிவிடுகிறது. ஒரே நாளில். முதலில் ஒரு இனம் மட்டும் தனித்து அடையாளம் காணப்படுகிறது. பின் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. பின் அவர்களது இனமே மொத்தமாய் அழிக்கப்படுகிறது. அந்த அத்தனை சம்பவங்களிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கும் ஒருவன் , விடாமல் துரத்தும் மரணம் , அதிலிருந்து தப்பி அத்தனை கொடுமைகளுக்கும் ஒரு மௌனசாட்சியாய் தன் இசையின் மூலம் உலகத்திற்கே அறிவிக்கிறான் அவன். அவன் ஒரு பியானிஸ்ட்.

அது செப்டம்பர் 1 1939 போலந்தின் வார் சா (WARSAW) நகரம் தன் அழகோடு அமைதியாய் ஒரு காலை வேளையில் தன் வேலைகளை மும்முரமாகிறது. ஒரு நிசப்தமான வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவுக்கூடம் . அதன் உள்ளே தனிமையில் ஒருவன் தனது பியானோவில் மிகப்புகழ் வாய்ந்த ஒரு இசையை வாசித்துக்கொண்டிருக்கிறான். வெளியே அதை பதிவு செய்யும் இருவர் ரசித்தபடி இருக்கின்றனர். இசை மெல்லியதாய் நகர அவனது விரல்கள் அந்த பியோனோவினைத்தழுவ.. மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வெளியே பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் அவனை நிறுத்தச்சொல்லி வெளியே அழைக்கின்றனர். அவன் விடாது வாசித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் இன்னொரு மிகப்பெரிய சத்தம். அடுத்த குண்டு. தொடர்ந்து வாசிக்கிறான் . மூன்றாவது குண்டு அந்த கட்டிடத்தின் ஒரு பகுதிலேயே விழுகிறது. இப்போது வேறு வழியின்றி வாசிப்பதை நிறுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். கட்டிடத்தை விட்டு வெளியே வர அங்கே அழகான பெண்ணொருத்தி நீங்கள் சில்மேன் தானே என கேட்கிறாள். ஆம் நான்தான் என இவள் சொல்ல. அங்கே ஒரு மெல்லிய காதல். அடுத்த குண்டு மீண்டும் விழுகிறது.அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.

இப்படித்தான் துவங்குகிறது பியானிஸ்ட் திரைப்படம்.

ஜெர்மனி இரண்டாம் உலகப்போரினை துவக்கிய காலம் அது .போலந்து நாட்டை ஆக்கிரமிக்கிறது. அந்நாடு முழுக்க ஜெர்மனி தன் படைகளை குவித்திருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் இத்திரைப்படம் துவங்குகிறது. வீட்டிற்கு செல்கிறான் சில்மேன் என்னும் இப்படத்தின் நாயகன். அங்கே அவனது தந்தை,தாய்,தம்பி மற்றும் தங்கை என அனைவருமே பிபிசி வானொலியின் அறிவிப்பை கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.அதில் இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்து தன் போரை அறிவிக்கிறது. இங்கிலாந்து போலந்தைக்காக்கும் என நம்புகின்றனர்.விரைவில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் விரட்டியடிக்கப்படுமென மகிழ்ச்சியடைகின்றனர்.அம்மகிழ்ச்சியை அன்றிரவே அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாட்கள் நகர்கிறது.ஜெர்மனி முழுமையாக போலந்தை தன் ஆக்கிரமிப்பில் கொண்டு வருகிறது.இக்காகலக்கட்டத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் (Jews )மீது தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்குகிறது ஆதிக்க அரசு.அனைத்து யூதர்களும் கட்டாயம் தங்களது சட்டைகளில் நீல நிற நட்சத்திரம் பதித்த பட்டையை அணிய வேண்டும் என்பதே அது.அந்த பட்டையும் இத்தனை சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறது.

பின் மற்றொரு அறிவிப்பு வருகிறது.யூதர்கள் தங்கள் வீட்டில் மிகக்குறிப்பிட்ட அளவு பணமே வைத்துக்கொள்ள வேண்டும் என அடுத்த அறிவிப்பு வருகிறது.சில்மேனின் குடும்பம் அதிர்ச்சியடைகிறது.அவர்களிடமிருக்கும் அதிக தொகையை மறைக்க இடம் தேடி அலைகின்றனர்.கடைசியில் சில்மேனின் தந்தையின் வயலினில் அவை மறைத்து வைக்கப்படுகிறது.

ஜெர்மனியின் தொடர் அறிவிப்பு அதிர்ச்சிகள் குறைவதற்குள் இடியாய் அடுத்த அறிவிப்பு வெளியாகிறது.யூதர்களுக்கென ஊரிலிருந்து பிரிந்து தனி காலனி அமைக்கப்பட்டு அங்கே இடம் பெயர வற்புறுத்தப்படுகின்றனர்.சில்மேனின் குடும்பமும் இடம் பெயர்கின்றனர்.வசதியாய் வாழ்ந்த அவர்களது குடும்பம் ஒரு சிறிய குடிலுக்குள் தங்க வைக்கப்படுகின்றனர். அனைத்து யூதர்களுக்கும் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு ,பசியிலும் பட்டினியிலும் கிடந்து வாடி சாகின்றனர்.

சில்மேனின் குடும்பமும் வறுமையில். சில்மேன் ஒரு சிறிய ஹோட்டலில் பியானோ வாசிக்கிறான்.அதற்கிடையில் அந்த காலனியில் இருக்கும் அனைத்து யூதர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிக்கின்றனர்.உண்மையில் அத்தனை பேரும் கொல்லப்படவே அழைத்துச்செல்லப்படுகின்றனர். சில்மேன் மட்டும் அவரது போலந்து போலீஸ் நண்பர் ஒருவரால் எதிர்பாராமல் தப்பவைக்கப்படுகிறான்.பின்தான் தெரிகிறது யூதர்கள் அனைவருமே சாகடிக்க படவே அந்த இடமாற்ற அறிவிப்பு என்பது.மீண்டும் போலந்து வீதிகளில் அநாதையாய் சுற்றித்திரிகிறான். யாருமே இல்லாத வீதிகள் அவை. மயான அமைதி.மயானமேதானோ என்று எண்ண வைக்கிறது. அத்தனை பிணங்கள்.
ஜெர்மனியப்படையிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவனை ஒரு கட்டுமானப்பணியில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.அங்கே அவனது சக யூத நண்பர்கள் ஜெர்மனிய படையிடம் மோத ஒரு திட்டம் தீட்டுகின்றனர். இவன் அதற்கு உதவுகிறான்.திட்டம் நிறைவேற்றப்படும் முன் அந்த இடத்தில் இருந்து தப்புகிறான்.அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவரின் உதவியை நாடுகிறான்.

நண்பர் அவனை அந்த பகுதியின் ஒரு கட்டிட்டத்தில் தங்க வைக்கிறார்.எப்போதாவது உணவு .என்கிற ரீதியில் ஒரு சிறிய அறைக்குள் பல நாட்கள் முடங்கிக்கிடக்கிறான்.அவனுக்கு உதவிய நண்பர் இறந்துவிட அந்த அறையைவிட்டு வெளியேறி மீண்டும் மறைந்து வாழ இடம் தேடி அலைகிறான்.மீண்டும் ஒரு நண்பர்.மீண்டும் தனிமை.எப்போதாவது உணவு. ஜன்னல் வழி உலகம்.

அறையிலேயே பியானோ இருந்தும் வாசிக்க இயலாது தவிக்கிறான்.பல முறை மரணத்தைக் கண்டும் இறந்து போகாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறான்.இப்படி மறைந்து வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என எண்ணி அழுகிறான்.
இதற்கிடையில் போலந்து நாடே அழிந்து போய் கிடக்கிறது.அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அழிந்து போயிருந்தது. ஜெர்மனி அடி மேல் அடி வாங்கி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

இவன் மட்டும் யாருமில்லா போலந்து வீதிகளில் உணவு தேடி அடையாளமிழந்து அலைகிறான்.ஒரு பாழடைந்த வீட்டில் கிடைத்த பழைய ரொட்டியும் ஒரு டின் ஏதோ ஒரு திரவத்தையும் வைத்துக்கொண்டு அங்கேயே மறைந்து வாழ்கிறான்.ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு ஜெர்மனி இராணுவ அதிகாரி ஒருவர் நுழைகிறார். இவன் அவரைக்கண்டு அஞ்சுகிறான்.யார் நீ என கேட்க , தான் ஒரு பியானிஸ்ட் என்கிறான்.எங்கே வாசித்துக்காட்டு என சொல்கிறார் அந்த அதிகாரி.

பல வருடங்களுக்கு பிறகு பியானோவில் விரலை வைத்து வாசிக்கத்துவங்குகிறான் தன் வாழ்க்கையின் மிக உன்னதமான இசையை இடைவிடாது பல மணி நேரங்கள் வாசித்து கொண்டே இருக்கிறான்.அந்த அதிகாரி அந்த இசையில் மெய்மறந்து நேரம் செல்வதைக்கூட அறியாது அமர்ந்திருக்கிறார்.

இரவாகிறது.அவனை உயிரோடு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் அந்த ஜெர்மனிய அதிகாரி.தினமும் அவனுக்கு அந்த பாழடைந்த வீட்டிலேயே உணவு கொண்டு வந்து தருகிறார். அது போல ஒரு நாளில் இனி நான் வரமாட்டேன் இனி உனக்கு விடுதலை என தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.

போர் முடிவடைகிறது.இவன் சுதந்திரமாய் தன் நாட்டின் வீதியில் இறங்கி நடக்க ,அவனது ஜெர்மனிய கோட்டைக் கண்டு போலந்து நாட்டினர் அவனை ஜெர்மானியன் என எண்ணி கல்லால் அடிக்கின்றனர்.தன்னை ஒரு யூதன் என அறிவித்துக்கொள்கிறான்.பின் ஜெர்மனியின் கொடும் சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுகின்றனர்.அங்கே அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.ஒரு யூதனிடம் சில்மேனை எனக்கு தெரியும் அவரிடம் நான் இங்கிருக்கிறேன் என சொல்லுங்கள் என்கிறான்.

மீண்டும் சில்மேன் தனது வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவுக்கூடத்தில் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறான்.அதே அமைதி. அதே இசை. சுதந்திரமான இசை.
அந்த அதிகாரியைத்தேடி சிறைக்கூடம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான்.அங்கே சிறையும் இல்லை அதிகாரியும் இல்லை..

சில்மேன் என்கிற அக்காலத்திய பியானிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது.சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதப்பெற்ற ஒன்றாகும்.

அது தவிர பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி.ஜெர்மனிய சிறைகளின் கொடுமைகளையும் , கீட்டோ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த பிரச்சனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறார். யூதரான இவர் போலந்தைச்சேர்ந்தவர். இவரும் ஜெர்மனியின் படைகளால் துன்புறுத்தப்பட்டு அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக ஆஸ்கரின் சிறந்த இயக்குனர் விருதையும் வென்றார்.

தனிமையின் இசை மிகவும் அழகானது
அது நம் வாழ்வோடு இணைந்தது
அது மரணத்தின் வாசலில் அதீத ஒலியுடன் எதிரொலிப்பது
மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை.

Sunday, May 31, 2009

புத்தரின் படுகொலை! - பேராசிரியர் நுஹ்மான்


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அரவது சடலம் குருதியில் கிடந்தது.

இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்"
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல் ஒரு ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்தான்..."
என்றனர் அவர்கள்.

'சரிசரி
உடனே மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோகவாத சூத்திரத்தினைக்
கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான்ழூ சாம்பரானது.


பேராசான் நுஹ்மான் அவர்களின் நினைவுகளின் வரிகள்......

சிவலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.
தமிழர்களுடைய வரலாற்று, பண்பாட்டு தொன்ம அடையாளங்களை எரியூட்டிய நாள் நினைவாக… [எரியூட்டப்பட்ட நாள்: 31.05.1981]

Friday, January 23, 2009

"The Sorrows of Young Werther"

" காதலின் துயரம் "




" The Sorrows of Young Werther" by "Johann Wolfgang Von Goethe"
ஜெர்மன் மொழியில் வெளிவந்த இந்த குறுநாவல் "கதே "யினால் 1774 ஆண்டு எழுதப்பட்டது . மனித குலத்தில் காவியமாகப் போற்றப்படும் பல கதைகள் , காதலின் பிரிவினால் ,கண்ணீரின் உவர்ப்பிலும் ,பிரிவின் வலியிலும் பிறந்தவையே ..அதனாலேயே அவை ' காவிய' பெருமைக்குரியனவாகின ..
இந்த நாவலும் காதலுக்காக உயிர் துறந்த ஓர் இளம் காதலன் "வெர்தர்" ,அவன் காதலி "லோதே" ஆகியோரைப் பாடுகிறது .. கைகூடக் காதலை , துயரத்தின் வலியை கற்பனை கலந்த கவிதை நடையில் கடித வடிவில் விபரிக்கிறார் "கதே" .


மனம் வெறுத்து தேசாந்திரியாகச் செல்லும் ஒருவன் யதேச்சையாக சந்திக்கும் பெண் மேல் காதல் கொள்கிறான் .. அவள் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப் பட்டவள் என்று தெரிந்துமே அவள் மீது ஈர்ப்புக் கொள்கிறான் ."ஆல்பர்ட்" என்னும் கனவானான அவனும் "வெர்தர்" மீது நட்புக் கொள்கிறான் நாளடைவில் ..காதலா , நட்பா என்னும் மனப் போராட்டத்தில் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறான் இளம் 'வெர்தர்'. தன் காதலி இன்னோருவனுக்கானவள் எனத் தெரிந்தும் தன் மனத்தை கட்டுப் படுத்த முடியாமல் திணறும் நேரங்களிலும் ,அவர்களை விட்டு ஓட நினைத்தாலும் முடியாமல் திரும்பி வரும் அளவிற்க்கு அவள் மேல் கொண்ட காதலால் தன் மனதிற்குள் நடக்கும் முரண்பாடுகளோடு தன் தோழனுக்கு கடிதத்தில் சொல்லும் போது அதில் இளமையின் துடிப்பும் ,வாழ்வின் புதிர்களுக்குள் மாட்டிக் கொண்ட திகைப்பும், காதலின் பித்தும் ,தனிமையின் துயரும் என அழகான சொல்லாடல்கள் மூலம் நாமும் வெர்தருடன் பயணிக்கின்றோம் .


இயற்கையை ரசித்து ,ஓவியம் வரைந்து,' ஹேமர்' படித்துக் கொண்டு திரிந்தவன் 'லேதோ' வின் சந்திப்புக்கு பின் காதலின் உச்சத்தில் நின்று சாத்தியமில்லாக் காதலிற்காய் உயிர் உருகி நிற்கிறான். வேகமான உணர்ச்சித் தெறிப்பும் ,கற்பனையும் ,கவிதையும் கலந்து வாழ்க்கையை விட இயற்கையை நேசிக்கும் மனம், நட்பு,காதல் போன்ற கலவைகளோடு 'வெர்தர்' என்னும் இளம் காதலன் ,இறுதியில் தன் மனதை வெல்ல முடியாமல் உயிரை விட காதலே மேலானது என முடிவெடுத்து காதலின்றி வாழ்வு இல்லை எண்டு தன்னையே மாய்த்துக் கொள்கிறான்.



ஒரு முக்கோண காதல் கதையின் வழியில் செல்லும் கதையின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அந்தக் கவி வரிகளினுடே நாமும் நழுவிச் சென்று இறுதியில் வெர்தருக்காக இரு துளி கண்ணீர் துளிர்வதை எம்மாலும் தடுக்க முடியாது ..தன் காதலி தற்செயலாய் தீண்டிய நேரங்களில் ,தன் நாளங்களை ரத்தம் கொப்பளிக்கிறது என்றவன் ...இறுதியாய் அவளை முத்தமிட்ட நேரத்தில் தான் உடுத்தி இருந்த உடைகளை மரணத்தின் பின் யாரும் களைய வேண்டாம் என வேண்டிக் கொள்கிறான் ஏனென்றால் அது அவள் தீண்டி புனிதமானது என்று சொல்லி அதனோடையே புதைக்கச் சொல்கிறான் அந்த காதல் பித்தன் .

இந்நாவலின் பின் பல இளைஞ்சர்கள் 'வெர்தர்' போலவே உடை உடுத்தி , நடை பேச்சு என்று மாறி காதலில் தோற்றுப் போக விரும்பினாராம் ..பின் வெர்தர் போலவே தம்மை தாமே சுட்டுக் கொண்டு செத்துப் போனார்கள் .ஜரோப்பா எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெர்தர் காதலின் இலட்சிய புருஷனாகவே நினைத்து வழிபட்டனர்.இளம் யுவதிகள் எல்லாம் வெர்தர் போன்ற ஒரு காதலன் கிடைக்க மாட்டானா என ஏங்கித் தவித்தனராம் ,அந்தளவுக்கு ஒரு நூற்றாண்டில் பாரிய மாற்றத்தை உண்டாக்கிய இந்நாவலை மாவீரன் நெப்போலியன் பல நூறு முறை படித்ததாகவும் எப்போதும் தன் படுக்கை அருகில் வைத்திருந்ததாகவும் பதிவு செய்துள்ளனர் ..

தமிழில் "காதலின் துயரம் " என இதை எழுதியிருப்பவர் எம். கோபாலகிருஷ்ணன், முடிந்தால் படித்துப் பாருங்கள் .....

Friday, January 2, 2009

நந்தன் அண்ணாவின் நினைவுகளோடு ...


இணையத்தில் பார்த்த செய்தி கொஞ்சம் பழைய நினைவுகளை கிளறி விட்டது , கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் அமரர் நாகலிங்கம் நந்தகுமார் அவர்களின் நினைவஞ்சலி ... கனக்கும் மனசோடு போட்டி போட்டு இதை பதிவாக்குவதில் முனைய வலி மட்டுமே இறுதியில் மிஞ்சி நிற்கிறது ..இதுவே முதல் பதிவு ஆனதில் வருத்தம் தான் எனக்கு ...

ஒற்றை இரவில் அகதியான நாள் , யாழ் இடப்பெயர்வு ... வன்னி மண் எமக்கு புதிது .. அந்த உயிர் குடிக்கும் கொசுவும் , மலேரியா காச்சலும் கொஞ்சம் கொஞ்சமாய் பழக ஆரம்பித்த நாட்கள் ...
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் இருந்த எமக்கு அப்போதைய ஆறுதல் ஸ்கந்தபுர நூலகம் மட்டும் தான் . அதற்கும் ஒரு நாள் கேடு வந்தது கரையான் ரூபத்தில் ...இப்ப நினைக்கவும் சிரிப்பாய் வருகிறது...எனது அக்கா படித்துவிட்டு விரித்தபடி வைத்த புத்தகம் ,காலையில் பார்க்கையில் சில பக்கங்கள் கரையானால் தின்னப்பட்டு இருந்தது. போய்ச் சொல்லி அபராதம் கட்டலாம் என சொல்ல பொறு .. இப்படிச் செய்வம் ,கண்டு பிடித்தால் பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்லி .. அந்தப் பக்கங்களின் சுவடே தெரியாமல் வெட்டி விட்டு நல்ல பிள்ளைகளாய் நூலகம் சென்றோம் இருவரும் ..அங்கு கொடுத்துவிட்டு திரும்பி வந்து சைக்கில் எடுக்கையில் அவர்களுக்கு தெரிந்து பின் என்ன ,,,அசடு வழிந்து ... உங்க ஊர் கரையானால் தான் எனக் குறை கூறியாதும் , அக்காவை திட்டிக் கொண்டே நான் வந்தது ... அன்று தான் நந்தன் அண்ணாவை முதல் முறையாகப் பார்த்த நாள் ...
பின்பு ஒரு நாள் ...
பள்ளி தொடங்காத நிலையில் ஸ்கந்தபுரம் 'கேம்பிரிச்' ரியூசனுக்கு சேர்ந்து புது நட்பு வட்டாரத்தோடு இணைந்து இருந்த நேரம் ... முதல் வரிசையில் கணித ஆசிரியருக்காக காத்திருக்கையில் வந்தவர் சாட்சாத் நந்தன் அண்ணா தான்...அவரும் என்னை இனங்கண்கொண்டு கொள்ள , திரும்ப அதே அசட்டுச் சிரிப்போடு இருந்து விட்டு ,வீடு வந்து அக்காவுடன் சண்டை போட்டதும் ஜாபகத்தில் உள்ளன ...எல்லோரும் மாஸ்ரர் என அழைக்க ,நான் மட்டும் நந்தன் அண்ணா என கூப்பிட ஆரம்பித்தது ஏன் என இப்போது வரைக்கும் தெரியாது ...புதிதாக வந்தவர்கள் உங்க அண்ணாவா எனக் கேட்டும் போதும் ..நான் ஓம் எனச் சொல்லியதும்...

கணித பாடம் வேப்பங்காயாய் இருந்த எனக்கு அதனை நேசிக்க வைத்தவர் ,, இங்கு இந்தியா வந்தபின்பும் "இலங்கை மாணவர்கள் கணிதத்தில் கெட்டிக்காரர் "என்னும் பெயரை என்னாலும் காப்பற்ற முடிந்தது நந்தன் அண்ணாவால் தான்..நன்றிகள் அண்ணா ..அவரை நினைக்கையில் ஈக்குக்குச்சி ஜாபகம் வரும் .. பாடத்தில் வரும் "கிராப்"ல் "ஆர்க்" வரைய நேரும் போதெல்லாம் ,நான் புள்ளிகள் மட்டுமே வைத்துவிட்டு இருப்பேன் ...கோணலாய் வருகுது அண்ணா எனச் சொல்லி ... அடுத்த வகுப்புக்கு வரும் போது பச்சை ஈக்குச்சி கொண்டு வரணும் சரியா ..எனச் சொல்லிக் கொண்டு வரைந்து ,அழகாய் முடிந்துக் கொடுப்பவர் ...அவர் யாழ் போகும் வரை எனக்காக வரைந்தும் அவர் தான், கடைசியாய்க் கேட்டார் ,பரிட்சைக்கு என்ன செய்விங்க என..அப்ப பார்த்துக்கலாம் அண்ணா எனச் சொல்லுவேன் ...

எங்காவது அவரும் ,அம்பிகா அக்காவும் கதைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டால் ,சைக்கிளில் அருகில் சென்று ,நானும் என் தோழிகளும் "அடுத்தது கணிதப் பாடம் என்ன... கிளாசுக்கு லேட்டா போன எங்க மாஸ்ரர் திடுவார்,கெதியா "எனச் சொல்லி ஓடுவோம், வகுப்பறை வந்ததும் என் காது திருகிச் சிரிப்பார்..இன்று அதே அம்பிகாக்கா கைக் குழந்தையுடன் கதறிக் கொண்டு இருப்பதையும் பார்க்கும் கொடுமையை தந்து விட்டு செல்ல வைத்து எது ?
கடைசியாய் யாழ்ப்பாணம் போக கிளம்பிய பின்,எம்மிடம் விடைபெற வந்தது இன்னும் கண்முன்னால்..உங்க 'சேட்' தான் போட்டு இருகிறன் ,என எனக்கு பிடித்தமான வெளிர் பச்சை நிறச் சட்டையுடன்,எமக்கு வாழ்த்து சொன்னதும், என்றாவது நாம சந்திப்போம் தானே ..கவலைப்படாம படியுங்க எனச் சொல்லிச் சென்ற நந்தன் அண்ணா...
நானும் தனுஷாவும் ரியுசன் வரும் வழியில் சைக்கிளில் விழுந்து எழும்பி செம்மண்ணும் ,காயத்தோடு வந்து சேர்ந்ததை அடிக்கடி சொல்லி நக்கலடிக்கும் நந்தன் அண்ணா,இரட்டையர்களான தர்ஷியும் ,தர்ஷனும் வகுப்பில் போடும் சண்டைகளைப் பார்த்து ,"சந்திரிகாவும் ,பிரபாகரனும் சண்டைய கொஞ்சம் நிப்பாட்டுங்கோ "என அடிக்கடி அவர் சொல்லுவதும் இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறது..

இப்படி எத்தனையோ இனிய நினைவுகள் ..
நம்பிக் கொண்டிருந்தேன் என்றோ ஒருநாள் திரும்பி வருவேன் ..உங்கள் எல்லோரையும் சந்திப்பேன் என.. என்னைப்போல எத்தனை பேரின் நம்பிக்கைக்கு எமனாய் வந்தது அல்லவா உங்கள் மரணச் செய்தி..என் தோழியிடம் அலைபேசியில் கதைத்துவிட்டு எப்போதும் போல எல்லோரையும் விசாரித்துக் கொண்டு இருந்தேன் ...
அப்படியே நந்தன் அண்ணா எங்க இருக்கிறார் எனக் கேட்க ,உங்கள் மரணச் செய்தி சொன்னாள் , உனக்கு தெரிந்தால் கவலைப் படுவாய் எனச் சொல்லவில்லை என்று சொன்னாள் நான்கு மாதங்கள் கழித்து ..இடி இறங்கியது போல் இருந்தது.....நம்பாமல் இணையத்தில் தேடி உறுதிப் படுத்திய பின்பும் ...பொய்யாக இருக்கக் கூடாதா என ஏங்கியது மனது ..நீண்ட நாட்களுக்கு பின் கண்ணீர் எட்டிப் பார்த்தது அன்று தான்..உயிர் பிரியும் நேரத்தை விட கொடுமையல்லவா நாம் நேசித்தவர்களின் பிரிவின் வலி ... உங்களை இழந்த வலியின் சுமையோடு நாம் ...

கவிஞர் வைரமுத்தின் வரிகள் நினைவிற்கு வருகின்றன ....
" நான் கண்ணால் பார்த்த யாரும்
எனக்கு முன்னால் பயணப்பட வேண்டாம்"

இனிய சகோதரனே !
எப்போதும் புன்னகையும்
ஆர்ப்பாட்டம் இல்லா அறிவும்
அனைவரையும் நேசிக்கும் பண்பும்
கற்றுக் கொடுக்கும் பாங்கும் ..
அவ்வளவு அழகு ...
யாரோ ஒருத்தியான எனக்கே
இத்தனை வலிகள் என்றால்
உன் உறவுகளை நினைத்து
கரைகின்றன விழிகள் ...
தொலைந்து போன நேசத்தை
நினைவுகளில் தேடுகிறேன் ...

தமிழ்நெற் இணைப்பு 01
தமிழ்நெற் இணைப்பு 02
தமிழ்வின்
 
Copyright © 2007-2009 www.snehidhi.tk™. All Rights Reserved.