Friday, January 23, 2009

"The Sorrows of Young Werther"

" காதலின் துயரம் "




" The Sorrows of Young Werther" by "Johann Wolfgang Von Goethe"
ஜெர்மன் மொழியில் வெளிவந்த இந்த குறுநாவல் "கதே "யினால் 1774 ஆண்டு எழுதப்பட்டது . மனித குலத்தில் காவியமாகப் போற்றப்படும் பல கதைகள் , காதலின் பிரிவினால் ,கண்ணீரின் உவர்ப்பிலும் ,பிரிவின் வலியிலும் பிறந்தவையே ..அதனாலேயே அவை ' காவிய' பெருமைக்குரியனவாகின ..
இந்த நாவலும் காதலுக்காக உயிர் துறந்த ஓர் இளம் காதலன் "வெர்தர்" ,அவன் காதலி "லோதே" ஆகியோரைப் பாடுகிறது .. கைகூடக் காதலை , துயரத்தின் வலியை கற்பனை கலந்த கவிதை நடையில் கடித வடிவில் விபரிக்கிறார் "கதே" .


மனம் வெறுத்து தேசாந்திரியாகச் செல்லும் ஒருவன் யதேச்சையாக சந்திக்கும் பெண் மேல் காதல் கொள்கிறான் .. அவள் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப் பட்டவள் என்று தெரிந்துமே அவள் மீது ஈர்ப்புக் கொள்கிறான் ."ஆல்பர்ட்" என்னும் கனவானான அவனும் "வெர்தர்" மீது நட்புக் கொள்கிறான் நாளடைவில் ..காதலா , நட்பா என்னும் மனப் போராட்டத்தில் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறான் இளம் 'வெர்தர்'. தன் காதலி இன்னோருவனுக்கானவள் எனத் தெரிந்தும் தன் மனத்தை கட்டுப் படுத்த முடியாமல் திணறும் நேரங்களிலும் ,அவர்களை விட்டு ஓட நினைத்தாலும் முடியாமல் திரும்பி வரும் அளவிற்க்கு அவள் மேல் கொண்ட காதலால் தன் மனதிற்குள் நடக்கும் முரண்பாடுகளோடு தன் தோழனுக்கு கடிதத்தில் சொல்லும் போது அதில் இளமையின் துடிப்பும் ,வாழ்வின் புதிர்களுக்குள் மாட்டிக் கொண்ட திகைப்பும், காதலின் பித்தும் ,தனிமையின் துயரும் என அழகான சொல்லாடல்கள் மூலம் நாமும் வெர்தருடன் பயணிக்கின்றோம் .


இயற்கையை ரசித்து ,ஓவியம் வரைந்து,' ஹேமர்' படித்துக் கொண்டு திரிந்தவன் 'லேதோ' வின் சந்திப்புக்கு பின் காதலின் உச்சத்தில் நின்று சாத்தியமில்லாக் காதலிற்காய் உயிர் உருகி நிற்கிறான். வேகமான உணர்ச்சித் தெறிப்பும் ,கற்பனையும் ,கவிதையும் கலந்து வாழ்க்கையை விட இயற்கையை நேசிக்கும் மனம், நட்பு,காதல் போன்ற கலவைகளோடு 'வெர்தர்' என்னும் இளம் காதலன் ,இறுதியில் தன் மனதை வெல்ல முடியாமல் உயிரை விட காதலே மேலானது என முடிவெடுத்து காதலின்றி வாழ்வு இல்லை எண்டு தன்னையே மாய்த்துக் கொள்கிறான்.



ஒரு முக்கோண காதல் கதையின் வழியில் செல்லும் கதையின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அந்தக் கவி வரிகளினுடே நாமும் நழுவிச் சென்று இறுதியில் வெர்தருக்காக இரு துளி கண்ணீர் துளிர்வதை எம்மாலும் தடுக்க முடியாது ..தன் காதலி தற்செயலாய் தீண்டிய நேரங்களில் ,தன் நாளங்களை ரத்தம் கொப்பளிக்கிறது என்றவன் ...இறுதியாய் அவளை முத்தமிட்ட நேரத்தில் தான் உடுத்தி இருந்த உடைகளை மரணத்தின் பின் யாரும் களைய வேண்டாம் என வேண்டிக் கொள்கிறான் ஏனென்றால் அது அவள் தீண்டி புனிதமானது என்று சொல்லி அதனோடையே புதைக்கச் சொல்கிறான் அந்த காதல் பித்தன் .

இந்நாவலின் பின் பல இளைஞ்சர்கள் 'வெர்தர்' போலவே உடை உடுத்தி , நடை பேச்சு என்று மாறி காதலில் தோற்றுப் போக விரும்பினாராம் ..பின் வெர்தர் போலவே தம்மை தாமே சுட்டுக் கொண்டு செத்துப் போனார்கள் .ஜரோப்பா எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெர்தர் காதலின் இலட்சிய புருஷனாகவே நினைத்து வழிபட்டனர்.இளம் யுவதிகள் எல்லாம் வெர்தர் போன்ற ஒரு காதலன் கிடைக்க மாட்டானா என ஏங்கித் தவித்தனராம் ,அந்தளவுக்கு ஒரு நூற்றாண்டில் பாரிய மாற்றத்தை உண்டாக்கிய இந்நாவலை மாவீரன் நெப்போலியன் பல நூறு முறை படித்ததாகவும் எப்போதும் தன் படுக்கை அருகில் வைத்திருந்ததாகவும் பதிவு செய்துள்ளனர் ..

தமிழில் "காதலின் துயரம் " என இதை எழுதியிருப்பவர் எம். கோபாலகிருஷ்ணன், முடிந்தால் படித்துப் பாருங்கள் .....

2 comments:

  1. நல்லதொரு விமர்சனம் ஸ்னேகிதி. இனித்தான் தேடிப் பார்க்க வேண்டும். பதிவின் எழுத்துருவைச் சற்றுப் பெரிதாக்குங்கள். வாசிக்கக் கடினமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. விமர்சனம் என்று இதை சொல்ல முடியாது ரிஷான் ..அதற்கு தகுதியோ ,அனுபவமோ இல்லை எனக்கு..
    இதை எழுத தூண்டியது 'கதே' யின் வரிகளின் மேல் ஏற்பட்ட பிரமிப்பு,ஈர்ப்பு .. இன்னும் சொல்லப் போனால்
    எனக்குள்ளும் ஒளிந்துள்ள காதல் கூட காரணமாக இருக்கலாம் ..
    நன்றிகள் தோழரே .. நிச்சயமாக மாற்றுகிறேன் ..

    ReplyDelete

 
Copyright © 2007-2009 www.snehidhi.tk™. All Rights Reserved.