Sunday, May 31, 2009

புத்தரின் படுகொலை! - பேராசிரியர் நுஹ்மான்


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அரவது சடலம் குருதியில் கிடந்தது.

இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்"
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல் ஒரு ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்தான்..."
என்றனர் அவர்கள்.

'சரிசரி
உடனே மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோகவாத சூத்திரத்தினைக்
கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான்ழூ சாம்பரானது.


பேராசான் நுஹ்மான் அவர்களின் நினைவுகளின் வரிகள்......

சிவலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.
தமிழர்களுடைய வரலாற்று, பண்பாட்டு தொன்ம அடையாளங்களை எரியூட்டிய நாள் நினைவாக… [எரியூட்டப்பட்ட நாள்: 31.05.1981]

No comments:

Post a Comment

 
Copyright © 2007-2009 www.snehidhi.tk™. All Rights Reserved.